தைப் பொங்கல்
இந்தக் கட்டுரையைத் பிரஞ்சு மொழியில் படிக்கவும் | Lire cette article en Français
தமிழர் திருநாளாகப் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள
தமிழர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். தமிழகத்தில் தை மாதம்
முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகவும் அரசின் உத்தரவுப்படி
கொண்டாடத் தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிக்கைகு விசேஷம்
ஒன்று உண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை
ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை
உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம்
என்பார்கள். இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி
காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான்
இன்றைய பொங்கல் விழா. தமிழ் நாட்டைத் தவிர இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுன்றது. இப்பண்டிகை நான்கு நிகழ்ச்சிகளாக நடைபெறும்.
போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள் (மாட்டுப்
பொங்கல்), காணும் பொங்கல் என இந்நான்கு நிகழ்ச்சிகள்.
போகிப் பண்டிகை
போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று
கொண்டாடப்படுகிறது. போக்கி என்பதுதான் மருவி, போகி என்றாகி
விட்டது. ‘பழையன கழித்துப் புதியன புகவிடும்’ நாளாகப் போகி
கருதப்ப்டுகிறது. இந்நாளில் வீட்டில் உள்ள உதவாதப் பழைய
பொருட்களை நீக்கப்பட்டுப், புதிய பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும்.
தைப் பொங்கல் பண்டிகை
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.தைப்பொங்கல்
என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும்
விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும்
சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக்
கொண்டாடப்படுகிறது. மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில்
பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா.
மாட்டுப் பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி
கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர்
தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ
பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!
பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’
என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில்
தெளிப்பர்.
காணும் பொங்கல்
உற்றார் உரவினர்களை நேரில் சென்று பார்ப்பது, பெரியோரிடம் ஆசி
பெறுதல் உள்ளிட்டவை காணும் பொங்கலின்போது நடைபெறும்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடிமகிழ்வது காணும்
பொங்கலின் அடிப்படையாகும்.